திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் 6 மணி நேர ஊர்வலத்திற்கு பிறகு திருவள்ளுர் மாவட்டம் பொத்தூர் ரோஸ் நகர் பகுதியில் பல்வேறு கட்சி தலைவர்களின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்டிராங்கை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. பின்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஆம்ஸ்டிராங்கின் உடல், நேற்று முன்தினம் இரவு அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆம்ஸ்டிராங் ஆதரவாளர்கள் புடைசூழ சுமார் 3 மணி நேர ஊர்வலத்திற்கு பிறகு அயனாவரத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று காலை 5 மணி அளவில் அயனாவரம் இல்லத்தில் இருந்து பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டது. அங்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்தது. 

இதையடுத்து மாலை 5 மணிக்கு தொடங்கிய ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலத்தில், வீர முழக்கங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் திருவள்ளுவர் மாவட்டம் பொத்தூர் ரோஸ் நகர் பகுதிக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் செய்ய எடுத்து வரப்பட்டது. அப்போது இறுதி சடங்கிற்காக வைக்கப்பட்டு இருந்த அம்ஸ்ட்ராங்கின் உடலை பார்த்து அவரது மனைவி பொற்கொடி கையில் ஒன்றரை வயது குழந்தையை வைத்து கொண்டு அப்பாவை பாருடா என கதறி அழுதது அங்கு கூடி இருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. 

அதன்பின்பு பௌத்த முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்று பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 


Night
Day