திருவள்ளூர் (தனி) தொகுதியில் மோதும் EX ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இதேபோல் கோவை நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை பா.ஜ.க. சார்பில் களம் காண்கிறார். இருவேறு துறைகளின் ஆளுமைகள், தங்களது பணிகளை ராஜினாமா செய்து விட்டு, முழுநேர அரசியலில் அர்ப்பணித்து கொண்டுள்ளது குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்...

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி திருவள்ளூர் மக்களவை தனி தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளார்.  காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கர்நாடக மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். 

இவர் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்' என்ற காரணத்தை முன்வைத்திருந்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் களப்பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், அவருக்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியின் வேட்பாளராக சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதேபோல் பாஜக சார்பில் கோவை தொகுதி வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு, கர்நாடகாவில் ஏ.எஸ்.பி.யாக தனது பணியை தொடங்கிய அண்ணாமலை, பின்னர் சிக்மங்களூருவில் உள்ள உடுப்பியில் எஸ்.பி.யாக பணியாற்றினார். கடந்த 2019 ஆம் ஆண்டில், அண்ணாமலை தெற்கு பெங்களூரில் துணை ஆணையராக இருந்தபோது தனது பணியை ராஜினாமா செய்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்த அவருக்கு, சில வாரங்களிலேயே மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன்  மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பின், கடந்த 2021 ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார்.

தலைவராக பதவியேற்ற அண்ணாமலை, தமிழகத்தில் பாஜகவின் அரசியலில் வேகத்தைக் கூட்டினார். என் மண் என் மக்கள் யாத்திரை, திமுக ஊழல் பட்டியல் வெளியீடு என தொடர்ந்து அதிரடி காட்டிய அண்ணாமலை, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக தலைமையில் பா.ம.க, அ.ம.மு.க, தா.மா.க, ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணியைக் கட்டமைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக சார்பில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அண்ணாமலை களமிறங்கியுள்ளார். தேர்தல் களத்தில் மோதும் இருவரும் வெற்றியை ருசிப்பார்களா என்பது ஜூன் 4-ஆம் தேதி தெரிந்துவிடும். 

Night
Day