எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.86 கோடியில் கட்டப்பட்ட அணைக்கட்டில், திறப்பு விழாவிற்கு முன்பாகவே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அணைக்கட்டின் தரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 72 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எல்லீஸ் அணைக்கட்டு கடந்த 2021ஆம் ஆண்டு வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. தொடர்ந்து விவசாயிகளின் நீண்டகால போராட்டத்திற்கு பின்னர் ஒருவழியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக எல்லீஸ் அணைக்கட்டு கட்ட விளம்பர திமுக அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து சேதமடைந்த அணைக்கட்டை முழுவதுமாக இடித்து அகற்றி விட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 86 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் திறப்பு விழா நடைபெறுவதாக இருந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் காரணமாக திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட அதிகனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் எல்லீஸ் அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்டு பல்வேறு இடங்கள் சேதமடைந்தன. மேலும், கரையோரங்களில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் பாதுகாப்பு தடுப்புச்சுவர்கள் இரண்டாக உடைந்து சேதமடைந்ததோடு, தண்ணீரை சேமிப்பதற்காக கட்டப்பட்ட கான்கிரீட் தடுப்பு சுவர்களிலும் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது.
விரிசல் விட்டுள்ள கான்கிரீட் தடுப்புச் சுவர்களை மணல் மூட்டைகளைக் கொண்டு தடுத்துள்ள நிலையில், இந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துவிட்டால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அவலநிலை எழுந்துள்ளது. இதனிடையே 86 கோடி ரூபாயில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு முன்பே எல்லீஸ் அணைக்கட்டு சேதமடைந்துள்ளதால் தடுப்பணையின் தரம் குறித்து பல்வேறு தரப்பினரிடையே அச்சம் எழுந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி அணைக்கட்டின் உண்மை நிலையையும், தரத்தின் உறுதியையும் கண்டறிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.