எழுத்தின் அளவு: அ+ அ- அ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் 3 மடங்கு உயர்ந்திருப்பதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யவுள்ள மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவிலான மக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் 31ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முந்தய நாட்களான 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பயணிப்பதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை செல்ல 800 ரூபாயாக இருந்த கட்டணம், இரண்டாயிரத்து 500 ரூபாயாகவும், தென்காசிக்கு செல்ல ஆயிரத்து 200 ஆக இருந்த கட்டணம் மூவாயிரத்து 900 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதேபோல் திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கும் பேருந்து கட்டணம் உயர்ந்திருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் அரசு கூடுதல் பேருந்துகளை கையிருப்பு வைத்து இயக்காமல் இருப்பதே, ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் உயர்வதற்கு வழிவகுப்பதாகவும், இதுபோன்ற கட்டண உயர்வை விளம்பர அரசு கண்டுகொள்ளாமல் செயல்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.