எழுத்தின் அளவு: அ+ அ- அ
பல்கலைக்கழக துணைவேந்தர்களின் வீடுகளுக்கே சென்று காவல்துறை மிரட்டியதால் மாநாட்டில் பல துணைவேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடத்தி வருகிறார். இந்தநிலையில், ஆளுநர் தலைமையில் 4வது ஆண்டாக இன்று முதல் 2 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லியிலிருந்து கோவைக்கு விமான மூலமும், கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமும் உதகைக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் மோசமாக உள்ளதாகவும், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2ம் வகுப்பு பாடத்திட்டத்தைக் கூட படிக்க தெரியவில்லை என குற்றஞ்சாட்டினார். பல பல்கலைக்கழகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னரே, மாநாட்டை நடத்துவதாக அவர் தெரிவித்தார். துணைவேந்தர்களின் வீடுகளுக்கே சென்று காவல்துறை மிரட்டியுள்ளதால், இதற்கு முன் இல்லாத அளவிற்கு இந்த மாநாட்டில் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றம்சாட்டினார்.
துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், கல்வி நிறுவனங்களுக்கு சாதகமான அணுகுமுறை அவசியம் எனவும், நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சியடைவது அவசியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சியை வடிவமைப்பதில் துணைவேந்தர்கள் முக்கியமானவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
பஹல்காமில் நடைபெற்றுள்ள தாக்குதல் காட்டுமிராண்டித் தனமாக இருப்பதாக தெரிவித்த தன்கர், நாட்டின் வளர்ச்சியை எந்த சூழலிலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
துணைவேந்தர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்த ஆளுநருக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பாராட்டு தெரிவித்தார்.