எழுத்தின் அளவு: அ+ அ- அ
துணை வேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் மாநில அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் செயல்படுவார் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளியானது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு, ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்திருந்தது. இதில், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் அறிவித்தது.
ஆளுநர் மாளிகையின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில், ஆளுநர் மாளிகை இதற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கல்வி வளர்ச்சி, கல்விக்கான திட்டமிடுதல் போன்ற காரணங்களுக்காக மாநாடு நடத்தப்படுவதாகவும், மாநாடுக்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்து வருவதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசுக்கு எதிரான அதிகாரப் போட்டியில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தவில்லை எனவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்த மாநாட்டுடன் சேர்த்து சிலர் தவறான தகவல்களை பரப்புவதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.