தேனி லோயர் கேம்ப் பகுதியில் பவதாரிணி உடல் நல்லடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கல்லீரல் புற்றுநோய்க்காக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பாடகி பவதாரிணி, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். இதனையடுத்து அவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டு, தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பவதாரிணியின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் சென்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

பின்னர், பவதாரிணியின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் இன்று தேனியில் உள்ள லோயர் கேம்ப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லோயர் கேம்ப் பகுதியில் உள்ள குருஸ்ரீ க்ருபா வேதபாடசாலை வளாகத்தில் வைக்கப்பட்ட பவதாரிணியின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் நினைவிடம் நடுவே நல்லடக்கம் செய்யப்பட்டது.

லோயர் கேம்ப் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மகள் பவதாரிணியின் உடலுக்கு இசைஞானி இளையராஜா அஞ்சலி செலுத்தினார். அப்போது, இயக்குநர் பாரதிராஜா இளையராஜாவுக்கு ஆறுதல் கூறினார்.

இதனிடையே லோயர் கேம்பில் வைக்கப்பட்டிருந்த பவதாரணி உடலுக்கு இயக்குனரும், இளையராஜாவின் நண்பருமான பாரதி ராஜா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 

இதனிடையே பாடகியான பவதாரிணியின் உடலுக்கு அவரது சகோதரர்கள், 
யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Night
Day