எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் நகைகள், பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட எல்லையான எம்.மேட்டுப்பட்டியில் பறக்கும் படை அலுவலர் எழிலரசன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து திருச்சிக்கு மகேந்திரா பிக் ஆப் வாகனத்தில், உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மியூசியம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொலிரோ காரில் மளிகை கடை உரிமையாளர் ரஜினிகாந்த் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற ஒரு லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கார் புரோக்கர் தர்மதுரை என்பவர், தொழில் ரீதியாக எடுத்து சென்றது தெரியவந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 14 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய ஆணவங்கள் இன்றி கொண்டு சென்ற 53 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரை கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் நாதமுனி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கினர். லாரியில் நடத்தப்பட்ட சோதனையில் 600 மூட்டைகளில் இருந்த பாஜக கொடி, தொப்பி, முகக்கவசம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாத 13 லட்சத்து 28 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கோபாலபுரம் மீனாட்சிபுரம், நடுப்புணி, கோவிந்தாபுரம்,கிணத்துக்கடவு அருகே உள்ள சிறுகளத்தை மற்றும் கோவை சாலை பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.