தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் : சென்னையில் தீவிர வாகன சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்ததுள்ளன. தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், உரிய ஆவணங்களின் எடுத்துச் செல்லப்பட்ட லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 360 டிகிரி கேமரா பொருத்திய வாகனத்திலும் சென்று அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் என்எஸ்சி போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை சந்திப்பு அருகே நள்ளிரவு நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 10 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவ்வழியே சென்ற தஞ்சையை சேர்ந்த கலைவாணன் என்பவர், காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சியை சேர்ந்த சுரேஷ்குமாரின் காரை சோதனையிட்ட அதிகாரிகள், உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். 

நாகை மாவட்டம் நாகூர் வெற்றாற்று பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து வந்த வெங்கடேசன் என்பவரை சோதனையிட்டப்போது ஆவணங்கள் இல்லாமல் 1 லட்சத்து 53 ஆயிரத்து 400 ரூபாய் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், துணை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வட்டாட்சியர் பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜபாளையம் நோக்கி சென்ற காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சென்ற காரை சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 36 ஆயிரத்து 680 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



Night
Day