எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வடைய உள்ள நிலையில், தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் இன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டுமென தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் விளவன்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவடையும் வரை பல்வேறு விதிமுறைகள் செயல்பாட்டில் இருக்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சிப் பணியாளர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தேர்தல் தொடர்பாக பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலத்தை நடத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விவகாரங்களை திரைப்படம், தொலைக்காட்சி மூலம் மக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது மற்றும் கேளிக்கை நிகழ்ச்சி மூலம் தேர்தல் விவகாரத்தை யாரும் பரப்புரை செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த 2 விதிமுறைகளையும் மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணி முதல் செயல் திறனற்றதாகிவிடும் என்றும், வாக்காளர்களை வாக்குசாவடிக்கு வாகனத்தில் அழைத்து வருவது தண்டிக்க வேண்டிய முறைகேடான செயல் என்றும் தெரிவித்துள்ளது.