எழுத்தின் அளவு: அ+ அ- அ
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேரம் பணி உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 -ஆம் தேதி முதல் அந்நிறுவன தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, தொழிலாளர்களின் குடும்பத்தினரிடையே, தொழிற்சாலை மனிதவள மேம்பாட்டு நிர்வாக அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வேலைக்கு திரும்ப அழுத்தம் தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாம்சங் நிர்வாகம் சிஐடியு தொழிற்சங்க ஊழியர்களுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அடையாள அட்டை முடக்கப்படும் என தெரிவித்துள்ள சாம்சங் நிர்வாகம், வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் இல்லை எனவும், தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காலவரையற்ற போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு மற்றும் போனஸ் இல்லை என நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், அந்தந்த நாட்டில் உள்ள தொழில் சட்டம், தொழிலாளர்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்பதுதான் சட்ட விதி. ஆனால் இவை எல்லாம் வெறும் காகிதத்தில் மட்டுமே எழுதப்பட்டிருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதிக் கொண்டு, பல சட்ட நடைமுறைகளை பின்பற்றுவது கிடையாது என தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் சி ஐ டி யூ தொழிற்சங்கத்தினர் கூறும் புகாராக உள்ளது.
ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கம் அவசியம் என கருதிய சாம்சங் தொழிலாளர்கள், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு என்ற சங்கத்தை கட்டமைத்து தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களை ஒரு குடைக்கு கீழ் கொண்டு வந்துள்ளனர். ஆனால் சாம்சங் நிர்வாகம் இந்த சங்கத்தை அங்கீகரிக்க மறுத்து வருகிறது.
இதனிடையே சங்கம் அமைக்க தொழிலாளர்களுக்கு உரிமை இருப்பதால் சங்கத்தினை பதிவு செய்து வழங்க தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களை சமர்ப்பித்தும், அதிகாரிகள் தொழிற்சங்கத்தினை பதிவு செய்து வழங்காமல் சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சங்கத்தினை பதிவு செய்ய மறுக்கும் தொழிலாளர் நலத்துறையின் அமைச்சராக உள்ள
சிவி கணேசன் மற்றும் துறையின் செயலாளர், மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரியிடம் முறையிட்டும் எந்த பயனும் ஏற்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களிடம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்க வேண்டும். ஆனால், அதனை செய்ய தவறிய திமுக அமைச்சர், சாம்சங் நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு தொழிலாளர்களின் சங்கப் பதிவை பதிவு செய்யாமல் இழுத்தடித்து வருவதாக தொழிலாளர்கள் காட்டமாக குற்றம் சாட்டுகின்றனர்.