எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தததால் இரண்டாவது நாளாக டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், சுமார் 4 ஆயிரம் லாரிகள் மூலம் துறைமுகத்திலிருந்து எரிவாயுவை எடுத்து வரும் பணியை மேற்கொள்கின்றன.
2025-2030ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. இதில் மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், மாற்று ஓட்டுநர் இல்லாத பட்சத்தில் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் மூன்று கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் நேற்று முதல் தென் மண்டல அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையே கோவையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினரின் அறிவித்தனர். அதன்படி இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்ச்சியாக நடந்தால், தமிழகத்தில் வீட்டில் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி. சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.