எழுத்தின் அளவு: அ+ அ- அ
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை, வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 3-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை கஸ்தூரிக்கு, சென்னை போலீசார் நேரில் சம்மன் அளிக்க சென்றனர். அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை கடந்த 14ம் தேதி ரத்து செய்தார். முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதையடுத்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்படு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில், ஹைதராபாத் அருகே திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரியிடம், சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை அழைத்து சென்ற போது, அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என முழக்கம் எழுப்பினார். இதையடுத்து எழும்பூர் நீதித்துறை நடுவர் நீதிபதி ரகுபதி ராஜா முன்னிலையில் நடிகை கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தான் ஒரு சிங்கிள் மதர் என்றும், தனது சிறப்பு குழந்தையை பராமரிக்க வேண்டும் என்பதால் தன்னை விட்டு விடுமாறும் நீதிபதியிடம் நடிகை கஸ்தூரி முறையிட்டார். ஆனால், வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, புழல் மத்திய மகளிர் சிறையில் நடிகை கஸ்தூரி அடைக்கப்பட்டார்.