நடிகை சவுந்தர்யா மரணம் கொலையா..! விபத்தா..! நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பா..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பா.ஜ.கவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சென்ற போது விமான விபத்தில் சிக்கி நடிகை சவுந்தர்யா உயிரிழந்தது நாம் அறிந்ததே.. அவர் இறந்து கிட்டதட்ட 21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது அது விபத்தல்ல கொலை என்றும் நடிகை சவுந்தர்யா கொலைக்கும் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுக்கும் தொடர்பு இருப்பதாக ஒருவர் தெலுங்கானா போலீசில் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ஆந்திராவின் கரீம் நகரருக்கு பாஜகவின் பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடகாவின் பெங்களூரு அருகே உள்ள ஜக்கூர் ((Jakkur)) விமான ஓடுபாதையில் இருந்து காலை சுமார் 11 மணி அளவில் சிங்கிள் எஞ்சின் கொண்ட Cessna 180 என்ற விமானத்தில் புறப்பட்டார் நடிகை சுவுந்தர்யா. புறப்பட்ட ஐந்து நிமிடங்களிலேயே விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார் சவுந்தர்யா. அக்னி ஏவியேசன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தை பா.ஜ.க. வாடகைக்கு எடுத்திருந்தது. ஜக்கூர் விமான ஓடுபாதையில் TAKEOFF ஆன விமானம் கிட்டதட்ட 150 அடி உயரத்தில் மேல் நோக்கி பறந்துக்கொண்டிருந்த போது திடீரென விமானி விமானத்தை இடது புறமாக செங்குத்தாக திருத்தியதில் கட்டுப்பாட்டை இழந்து நிலைகுலைந்த விமானம் தரையில் வேகமாக மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. 

விமானத்தில் நடிகையும் சவுந்தர்யாவுடன் அவரது சகோதரர் அமர்நாத், பாஜக நிர்வாகி ரமேஷ்கடம் ஆகியோர் பயணித்த நிலையில் விமானி உட்பட அனைவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். நடிகை சவுந்தர்யாவின் இழப்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிரவைத்தது. அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து 90ஸ் காலக்கட்டத்தின் பிற்பகுதியில் திரையுலகை ஆட்டிப்படைத்த பல முன்னணி நடிகைகளுள் சவுந்தர்யாவுக்கு முக்கிய இடம் உண்டு. அவரது HOMELY LOOK ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த நிலையில் சவுந்தர்யாவின் இழப்பு ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாகவே இருந்தது. 

அதிலும் விமான விபத்தில் சிக்கிய சவுந்தர்யா-வின் உடல் கூட கிடைக்காதது, உயிரிழந்த போது அவர் கர்ப்பமாக இருந்தது என சவுந்தர்யாவின் மரணம் குறித்து வெளியான அனைத்து தகவல்களும் அதிர்ச்சியளிக்கும் விதமாகவே இருந்தது. இந்தநிலையில் தான் தற்போது நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியை சேர்ந்த சிட்டிமல்லி என்பவர் போலீசில் புகாரளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதுமட்டுமின்றி தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் சவுந்தர்யாவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் புகாரில் பகீர் கிளப்பியிருக்கிறார் சிட்டிமல்லு. தெலங்கானா மாநிலம் ஜல்பள்ளி என்னும் கிராமத்தில் நடிகை சவுந்தர்யாவுக்கு guesthouse உடன் கூடிய 6 செண்ட் நிலம் இருந்ததாகவும் இதனை தனக்கு விற்பனை செய்ய கோரி தெலுங்கு நடிகர் மோகன் பாபு சவுந்தர்யா மற்றும் அவரது சகோதரர் அமர்நாத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் சவுந்தர்யாவின் மரணத்துக்கு பிறகு சட்டவிரோதமாக அந்த நிலத்தை நடிகர் மோகன் பாபு ஆக்கிரமித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.  
 
இவ்விவகாரத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் பாதுகாப்பு வழங்க கோரியும் புகாரில் சிட்டிமல்லு குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிலம் தொடர்பாக நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மஞ்சு மனோஜுக்கும்  இடையே மோதல் நீடித்து வருவதாக புகாரில் தெரிவித்துள்ள அவர், உரிய நீதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை FIR பதிவு செய்யப்படவில்லை என்றே தெரிகிறது. 

கிட்டதட்ட 21 ஆண்டுகள் கழித்து நடிகை சவுந்தர்யா-வின் மரணம் விபத்தல்ல கொலை என புகார் அளிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மீண்டும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கும் நிலையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் வலுத்துவருகிறது.  தனிடையே, மோகன் பாபு மற்றும் சவுந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருவதாகவும், இந்த ஆதாரமற்ற செய்தியை மறுப்பதாகவும் சவுந்தர்யாவின் கணவர் விளக்கமளித்துள்ளார். 


Night
Day