எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இந்த இருசக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில் 100% வாக்கு அளிப்பது குறித்தும் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள் வாக்கு அளிப்பதற்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டார தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பூவனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைத்து மகளிர் சுயஉதவி குழு பெண்கள் ஒன்றிணைந்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல வண்ணங்களில் கோலம் போட்டு அசத்தினர். மேலும் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்கவேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு, விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புத்தந்தூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி கிராமிய பாடல்கள் மூலம் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, பழனி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் வீடு வீடாகச் சென்று, வெற்றிலை பாக்கு, பழங்கள் வைத்து வாக்காளிர்களிடம் அழைப்பிதழ் வழங்கி, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிக்காமல் இருப்பது தேசத்தின் வளர்ச்சிக்கு தீங்கு என்றும் அறிவுறுத்தினர்.
மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிப்பது குறித்து, தனியார் கல்லூரியின் சார்பில் சேலத்தில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரி இந்த பேரணியை தொடக்கி வைத்து இருசக்கர வாகனம் ஓட்டியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். புதிய வாக்காளர்கள் உட்பட அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாடாளுமன்றத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கோலப்போட்டிகள் நடைபெற்றன. இந்த கோலப்போட்டியில் வருவாய்த்துறை பெண்கள் அலுவலர்கள் மட்டுமல்லாது ஆண்களும் அதிகளவில் கலந்து கொண்டு கோலங்களை போட்டு அசத்தினர். எனது வாக்கு எனது உரிமை, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு என்பன போன்ற வாசகங்களை கோலங்களாக வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.