நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து துணை ராணுவத்தினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள 400 மீட்டர் உயரமுள்ள யானைமலை மேல் ஏறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், மாவட்ட தேர்தல் அலுவலர் சங்கீதா மற்றும் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஏராளமான தேர்தல் அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மலையின் மீது நூறு அடி நீளம் உள்ள விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நூறு சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் நடைபெற்ற கைப்பந்து, கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளிலும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் தலைமையில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலை பாதுகாப்பாக நடத்த துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஆத்தூர் ஊரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராமநாயக்கன்பாளையம், கல்பகனூர் பகுதியில் காவல்துணை கண்காணிப்பாளர் சதிஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 கம்பெனி மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் போலீசார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Night
Day