நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவியும் தர்மபுரி பாமக வேட்பாளருமான சௌமியா அன்புமணி ஆகியோர் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடைமையை ஆற்றினர்.
சென்னை அடையார் தாமோதரபுரம் அம்மன் கோயில் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில் புதுச்சேரி முன்னாள் ஆளுநரும், பாஜக தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது வாக்கினை செலுத்தினார். மேலும் விருதுநகர் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் அவரது சகோதரர் சண்முக பாண்டியன் ஆகியோரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கினை பதிவு செய்து தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார்.
சென்னை அடுத்த கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்த நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முதல் நபராக வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றிப் பெறுவேன் எனவும் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் உள்ள எம்.கே.பி நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்த தென்காசி பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் தனது குடும்பத்தோடு வாக்கினை பதிவு செய்தார்.
புதுச்சேரி திலாசுப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளிக்கு யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கில் சென்ற முதலமைச்சர் ரங்கசாமி, வாக்களித்து ஜனநாயக கடைமையை ஆற்றினார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த சேரால் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடியில் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நந்தினி தனது வாக்கை செலுத்தினார்.