நாடாளுமன்ற தேர்தல்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இந்த ஊர்வலத்தில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, சிந்தித்து வாக்களிப்போம்  என பதாகைகள் ஏந்தி கோஷங்கள் பலர் ஊர்வலம் சென்றனர். 

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மெழுகுவர்த்தி மூலம் இந்திய வரைபடத்தை உருவாக்கி, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அஞ்சல் அட்டையில் வாசகங்கள் எழுதி தங்களது உறவினர்களுக்கு அனுப்பினர். 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் தன்னார்வலர்கள் மற்றும் முதல்நிலை வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றனர். நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும், மதத்தின் தாக்கம் இல்லாமல் வாக்களிப்போம் என வாக்காளர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர். இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளம்பட்டி கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு வாகன பேரணி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  வரும் 19ம் தேதி வாக்கு மைத்திற்கு சென்று நூறு சதவிகிதம்  அனைவரும் வாக்களிக்க வேண்டும், பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க வேண்டும் என ஆட்சியர் சரயு வலியுறுத்தி பேசினார். முன்னதாக தேர்தல் விழிப்புணர்வு குறித்து வண்ண கோலங்கள் போடப்பட்டதை பார்வையிட்டு, சிறந்த கோலத்திற்கு பரிசளித்தார். 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாநகர காவல் துணை ஆணையாளர் பிருந்தா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனை சாலையில் தொடங்கிய இந்த பேரணி சின்ன கொல்லப்பட்டி வழியாக தனியார் பள்ளியில் நிறைவு பெற்றது. 

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். திட்டச்சேரி ப.கொந்தகை சாலை சந்திப்பிலிருந்து தொடங்கிய  அணிவகுப்பு ஊர்வலம், நடுக்கடை கடைத்தெரு வரை சென்றது. காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமையில் நடைபெற்ற பேரணியில்  ஒடிசா மாநில ஆயுதப்படை போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்கால் கடற்கரை சாலையில் பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களான பேருந்து நிலையம், கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும்  இடங்களில் பொம்மலாட்டம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த பொம்மலாட்டம் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

varient
Night
Day