நாட்டின் 78வது சுதந்திர தினம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கோடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

நாடு முழுவதும் 78ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரை சால்வை அணிவித்து கௌரவித்தார். மேலும், கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு அரசு துறையில் சிறப்பாக பணிபுரிந்த 329 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய அவர், 27 பயனாளிகளுக்கு 23.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 66 பேருக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தேசியை கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சமாதான புறாக்கள், மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென்காசி நகர பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற  சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் .

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சிம் ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பயனாளிகள் 84 பேருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து விடுதலைப் போராட்ட வீரர்களின்  குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்திய அவர், சமாதானத்தை வலியுறுத்தும் விதத்தில் பெண் புறாக்களை பறக்க விட்டார் மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

நாகையில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆகாஸ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, 59 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், அதனை தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட வருவாய்துறை சார்பில் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 84 பயனாளிகளுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரத்தில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பழனி, தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை உள்ளிட்ட 24 துறைகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து, வண்ண பலூன்களும் புறாக்களும் பறக்கவிடப்பட்டன. மேலும், பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியர் தர்ப்பகராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 35 பேருக்கும், பிற துறைகளை சார்ந்த 309 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து, பல்வேறு துறைகளின் கீழ் 49 பயனாளிகளுக்கு 10 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படையினர், சாரண சாரணியர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட எஸ்.பி. உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றிய மாவட்ட ஆட்சியர் அருணா, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, அமைதியை வெளிப்படுத்தும் விதமாக புறக்களை பறக்க விட்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தேசியக்க்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பல்வேறு துறைகளுக்கு கீழ் பணியாற்றும் 104 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணியாற்றிய 45 காவலர்கள் உட்பட 224 பேருக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஒரு கோடியே 52 லட்சம் மதிப்பில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர் பிரபுசங்கர், மூவர்ண பலூன்கள் மற்றும் புறாக்களை வானில் பறக்கவிட்டார். இந்த நிகழ்வில் 20 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், 412 நபர்களுக்கு சிறந்து பணியாற்றியதற்கான நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடி ஏற்றிய மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

சேலம் மாவட்டம் காந்தி விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் பிருந்தாதேவி தேசியக்கொடி ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதில், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். இதேபோல், சேலம் மாநகராட்சி, ரயில்வே கோட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Night
Day