நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகினால் விலகட்டும் - சீமான்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு இது களையுதிர் காலம் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை செயலாளரான காளியம்மாள், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தவர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காளியம்மாளை விமர்சித்ததாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் காளியம்மாள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.  இதனைத் தொடர்ந்து கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் காளியம்மாள் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.  

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே நடக்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழில் காளியம்மாள் பெயர் இடம்பெற்றுள்ளது. அதில் காளியம்மாளின் பெயருக்கு கீழ் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பு இடம்பெறாமல், சமூக செயற்பாட்டாளர் என்ற அடைமொழி இடம்பெற்றுள்ளது. சீமான் கடுமையாக விமர்சித்துவரும் கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். இதனால் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து காளியம்மாள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவு குறித்து காளியம்மாள் விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே காளியம்மாள் வேறு கட்சிக்கு செல்ல விரும்பினால் செல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியில் இருந்து காளியம்மாள் விலக முடிவு செய்தால்  விலகட்டும் என்றும், நாம் தமிழர் கட்சிக்கு இது களையுதிர் காலம் என்றும் தெரிவித்தார். வேறு கட்சிக்கு செல்லும் உரிமை காளியம்மாளுக்கு உண்டு என்றும் சீமான் கூறினார்.

Night
Day