நாளை உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாளை வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, வரும் 12 ஆம் தேதி இலங்கை - தமிழகம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

நாளை முதல் வரும் 10ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

வரும் 11ம் தேதி, தமிழகத்தின் கடலோர மாவட்டம், உள் மாவட்டம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வரும் 12ம் தேதி, தமிழகத்தின் கடலோர மாவட்டம், உள்மாவட்டம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Night
Day