எழுத்தின் அளவு: அ+ அ- அ
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழையும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழைக்கும், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கும், வரும் 19-ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
வரும் 20-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 21 முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.