நிர்ணயித்த விலையை விட அதிக தொகைக்கு சோலார் மின்சாரம் கொள்முதல் செய்ததாக தமிழக அரசு மீது புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு மின் உற்பத்திக் கழகமான TANGEDCO மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் வாங்க பல தனியார் மின் உற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதில்  OPG Power & Infrastructure Private Limited நிறுவனத்தில் 414 மெகாவாட் நிலக்கரி மின்சாரமும், 64 மெகாவாட் சோலார் மின்சாரமும் வாங்க  ஒப்பந்தமாகியுள்ளது.

ஆனால் இந்த நிறுவனத்தில் நிர்ணயித்த விலைக்கும் அதிகமாக தமிழக அரசு மின்சாரம் வாங்கியதாகவும் இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில்தான் இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் மற்றும் சட்ட விரோத அந்நிய முதலீடு ஆகியவை  நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னையில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அந்த வகையில், சைதாப்பேட்டை சின்னமலை சாலையில் உள்ள OPG Power & Infrastructure Private Limited அலுவலகம், ஆர்.ஏ புரத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் இயக்குநரான அரவிந்த் குப்தாவின் வீடு, தேனாம்பேட்டையில் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள கௌஷிக் சோலார் கம்பெனி உரிமையாளரான கெளசிக் என்பவரது வீடு, ஆந்திர எல்லையான தடா மற்றும் செங்கல்பட்டில் உள்ள இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முழுமையான சோதனைக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே சோதனை நடைபெற்று வரும் OPG Power & Infrastructure Private Limited நிறுவனம்தான், மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் ஒப்பந்த அடிப்படையில் மின் விநியோகம் செய்து வருகிறது. தற்போது அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சோதனை அங்கும் பேசுபொருளாகியுள்ளது. 

Night
Day