நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்களை ஏற்ற மறுத்ததுடன், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்த பெண்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கேள்வி கணைகளால் துளைத்து எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால், பெண்களை இலவசமாக அழைத்துச் செல்வதால் தங்களுக்கு கலெக்‌ஷன் படி குறைவதாகக் கூறி, ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பெண்களை 10 அடி முன்னதாக பேருந்தை நிறுத்திவிடுவது, அல்லது நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்று விடுவது வழக்கமாகி வருகிறது. இந்த குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க பெண்கள் இலவச பயணம் செய்வதால், காசு கொடுக்கும் பயணிகளுக்கு இடம் கொடுக்குமாறு கூறுவதாகவும், பெண்களை நின்று கொண்டே வருமாறு வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் தங்களுக்கு மரியாதையே இல்லாமல் போய் விட்டதாக பெண்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பெண்களை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தை பாதிக்கப்பட்ட பெண்கள் சிறைபிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி வழியாக காரைகுளம் செல்லும் வழித்தடத்தில் இயக்கப்படும் மகளிர் கட்டணமில்லா அரசு பேருந்தில் பெண்களை ஏற்ற மறுப்பது தொடர்கதையாக நீடித்து வருகிறது. கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், சாந்து தட்டு, மண்வெட்டி ஆகிய பொருட்களுடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும். பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பதால் இதுபோன்று பொருட்களுடன் பேருந்தில் ஏற வந்தால் பேருந்து நிற்காது என ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அலட்சியமாக கூறியுள்ளனர். மேலும் 100நாள் வேலை மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் நிற்கும் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தாமல் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திருச்சுழி அருகேயுள்ள பள்ளிமடம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை பார்க்கும் பெண்களுடன் சேர்ந்து காரைக்குளம் செல்லும் அரசு பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உங்க வீட்டு சொத்து போகிறது..? ஏன் நிப்பாட்டாம போறீங்க..? என அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அடுத்தடுத்த கேள்விகளால் பெண்கள் வெளுத்து வாங்கினர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில், சம்பந்தப்பட்ட அரசுப்பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Night
Day