எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடந்த 2019-ஆம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. ஒரு அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும் வழங்கினால்தானே வழக்கை முழுமையாக விசாரிக்க இயலும் என்றும் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் அதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும் என்றும் நீதிபதி புகழேந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 27 ஆவது குற்றவாளியாக உள்ள தருண்மோகன் என்பவர் வழக்கிலிருந்து, தன்னை விடுவிக்கக்கோரி மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைரேகை பதிவு, தேர்வுமையம், தொலைபேசி எண்கள் ஆகியவை சிபிசிஐடிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி, "ஒரு அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும், வழங்கினால்தானே முழுமையாக விசாரிக்க இயலும் என தெரிவித்தார்.
தொடர்ந்து இதுவரை இந்த வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சிபிசிஐடி தரப்பில், "கைரேகை பதிவு, தேர்வுமையம், தொலைபேசி எண்கள் தொடர்பான விபரங்கள் கடந்த 22 ஆம் தேதி வழங்கப்பட்டதாகவும் ஆனால் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், முக்கிய இடைத்தரகராக செயல்பட்டவர் குறித்த விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், தேசிய தேர்வு முகமை விண்ணப்பங்களைள் கொடுக்கப்படும் பட்சத்தில் அது உறுதி செய்யப்படும் என்றும் ஆகவே கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என சிசிபிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும் என குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.