எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை பாளையங்கோட்டையில் ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த விவகாரத்தில், மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
நெல்லை பாளையங்கோட்டையை தலைமையிடமாக கொண்டு ஜல் நீட் அகாடமி என்ற பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களை உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் பிரம்பால் அடித்துள்ளார். மேலும், மாணவி மீதும் காலணியை தூக்கி வீசியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பயிற்சி மைய உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த மேலப்பாளையம் போலீசார், தலைமறைவாக உள்ள ஜலாலுதீனை இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் பயிற்சி மைய உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
இதனிடையே, மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், ஜல் நீட் பயிற்சி மையத்திற்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விடுதிக்கு உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.