எழுத்தின் அளவு: அ+ அ- அ
உதகை மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், சோதனைச் சாவடிகளில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
நீலகிரிக்கு நாள்தோறும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் உதகை மற்றும் கொடைக்கானலில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை வெகுவாக கட்டுப்படுத்தும் வகையில், இ-பாஸ் திட்டத்தை அமல்படுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று வார விடுமுறை நாளையொட்டி கேரள மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்களின் வாகனங்களை நாடுகாணி சாதனை சாவடியில் இ-பாஸ் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.