எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கான்கிரீட் திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை சந்திப்பில் புதியதாக கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை உள்ளிட்ட 7 துறைகளில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை கண்டுக்கொள்ளாத விளம்பர அரசின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதியதாக கட்டப்பட்டுள்ள நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைத்தார். ஆனால் திறந்து வைத்த சில நிமிடங்களிலேயே பேருந்தின் மேற்கூரை கான்கிரீட் திடீரென பெயர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றுகூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அப்பகுதி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வெளியேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்ததையொட்டி, நெல்லை மாநகர பகுதியான முருகன் குறிச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள், முதல்வர் போன்று அமைச்சருக்கே போக்குவரத்து நிறுத்தமா என வேதனை தெரிவித்தனர்.