எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென் தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நெல்லை, நாகை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மாநகர பகுதியான நெல்லை ஜங்சன், டவுன், பாளையங்கோட்டை, சமாதானபுரம், கே டி சி நகர், மகாராஜா நகர், தியாகராஜ நகர் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான தாழையூத்து, மானூர், பேட்டை, முன்னீர்பள்ளம், மேலப்பாளையம் ஆகிய இடங்களிலும் இடைவிடாது வெளுத்து வாங்கிய மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அதிகபட்சமாக நாங்குநேரி பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. இதேபோல் களக்காடு பகுதியில் 57 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவி 47 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு பகுதியில் 45 மில்லி மீட்டரும் பாதிவகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள களக்காடு மலைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக களக்காடு தலையணை பகுதிக்கு இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதனிடையே தொடர் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளுக்கும் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 87 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் இன்று காலை நிலவரப்படி 82 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் 7-வது நாளாக இன்று மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலப்பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.