நெல்லை - வகுப்பறைக்கு அரிவாளுடன் வந்த 10ம் வகுப்பு மாணவன்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை சந்திப்பு அருகே ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள அரசு ஊதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர் புத்தகப்பையில் அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவரின் வீட்டில் புகுந்து சக மாணவர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லையில் பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் தனது புத்தகப் பையில் அரிவாளுடன் பள்ளிக்கு வந்ததால் அவரை ஆசிரியர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதுக்குள் தற்போது, நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மாணவர் புத்தகப் பையில் அரிவாளுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்த போது புத்தக பையில் இருந்து அரிவாளை கைப்பற்றினர். பின்னர் பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மாணவரிடம் விசாரணை செய்தனர். அப்போது கொண்டான் நகரம் பகுதியில் இருந்து தான் பள்ளிக்கு வருவதாகவும், அதே பகுதியை சேர்ந்த சில மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலால், பாதுகாப்புக்காக பள்ளிக்கு அரிவாளை கொண்டு வந்ததாகவும் மாணவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவரின் பெற்றோர் பள்ளிக்கு அழைக்கப்பட்டு, மாணவருக்கு டி.சி. வழங்கியதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல் நிலவி வரும் நிலையில் பள்ளிக்கு மாணவர் அரிவாளுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day