எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஜாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னதுரை, 12 ஆம் வகுப்பு தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு நாங்குநேரியில் ஜாதி ஆதிக்க மனோபாவம் கொண்ட சக மாணவர்கள் வீடு புகுந்து கொலை வெறித்தாக்குதல் நடத்தியதில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சின்னதுரை 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். கணினிப்பொறி பயன்பாடு பாடத்தில் 94 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 93, கணக்குப்பதிவியலில் 85, வணிகவியலில் 84, தமிழில் 71, பொருளாதாரத்தில் 42 மதிப்பெண்களும் பெற்று சின்னத்துரை அசத்தி உள்ளார். ஆடிட்டர் ஆகுவதுதான் தனது எண்ணம் என்றும், அதற்கு ஏற்ப பிகாம் சிஏ பாடப்பிவில் படிக்க உள்ளதாகவும் மாணவர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.