நெல்லை: உதயநிதி ஸ்டாலினின் பிரசார கூட்டத்தில் திமுகவினர் இடையே அடிதடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரக் கூட்டத்தில் திமுகவினர் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஷை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். பிரசாரத்தில் பங்கேற்க திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டு வந்தனர். அப்போது சபாநாயகரின் ஆதரவாளரான ஜெகதீஷ் தரப்புக்கும் மற்றொரு தரப்புக்கும் ஏற்பட்ட கோஷ்டி மோதல் அடிதடியில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, நாங்குநேரி கூட்டத்திற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், அமைச்சரின் வருகை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால் பெண்கள் நடு ரோட்டிலேயே காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும்போதே பெண்கள் சாரை சாரையாக கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.  

இதேபோல் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் பிரசாரத்திற்காக தலைக்கு 200 ரூபாய் கொடுப்பதாக கூறி திமுகவினர் ஏராளமான பெண்களை வரவழைத்துள்ளனர். ஆனால் சேியபடி  200 ரூபாய் தராமல், 50 ரூபாய் மட்டுமே கொடுத்ததால் பெண்கள் ஆவேசம் அடைந்தனர். 

தென்காசி திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமாருக்கு ஆதரவான பிரசாரத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பெரிய அளவிலான கொடிக்கம்பம், சாலையில் சென்ற கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் மேல் பகுதி சேதமான நிலையில், அப்பகுதியில் நடப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை முழுவதுமாக அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. 

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் திமுக பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் சின்னம் இடம்பெறாமல் திமுகவினரை மட்டுமே முன்னிலை படுத்தி பதாகைகள் வைத்திருந்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் காங்கிரஸ் சின்னம் புறக்கணிக்கப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சென்ற திமுக கொடி கட்டிய வேட்பாளர் தரணிவேந்தன், அமைச்சர் ஏ.வா.வேலுவின் மகன் கம்பன், முன்னாள் போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரனின் வாகனங்களை நிறுத்த முயன்ற நிலையில், எந்த வாகனங்களும் நிற்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாமர மக்களுக்கு ஒரு சட்டம், அரசியல் கட்சியினருக்கு ஒரு சட்டமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Night
Day