எழுத்தின் அளவு: அ+ அ- அ
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 2018ம் ஆண்டு எஸ்பிகே குழுமம், டிவிஎச் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி 100 கோடி ரூபாய் பணம், 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் இல்லம், அவரது மகன், மகளின் இல்லங்கள் மற்றும் சகோதரர்கள் இல்லம் மற்றும் அவர்களுக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வசிக்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் வீட்டிலும், அங்குள்ள கட்டுமான நிறுவனத்திலும் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோன்று அடையாறு காந்திநகர் பகுதியில் உள்ள அவரது உறவினரும் டிவிஎச் நிறுவன இயக்குனருமான ரமேஷ் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அடையாறு எல்பி சாலையில் உள்ள ரவிச்சந்திரனின் உறவினர் அறிவுமதி பிரேமலதா வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. சைதாப்பேட்டை சிஐடி நகர் ட்ரூடம் நிறுவனத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையும் நிறைவடைந்துள்ளது.