எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவாரூர் அரசு மருத்துவமனைக்குள் நாய்கள் சுற்றித்திரிவதோடு, நோயாளிகளின் படுக்கையில் படுத்து கிடக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையின் அலட்சியம் குறித்தும், அச்சத்துடன் இருக்கும் நோயாளிகளின் அவதி குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய மக்களுக்கான மருத்துவமனையான திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவதற்குரிய கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.
இருப்பினும் இந்த மருத்துவமனையில் போதுமான சிறப்பு மருத்துவர்கள் இல்லை என்றும், மருத்துவமனையை சுற்றிலும் சுத்தமற்று கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் மின்சாரம் தடைபட்டதால் உயிரிழந்தது, தவறான சிகிச்சையால் கர்ப்பிணி இறந்தது என இந்த மருத்துவமனையில் அடுக்கடுக்கான பிரச்சனைகள் எழுந்த நிலையில், மேலும் ஒரு அவலம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவில் நாய்கள் சுற்றித்திரிவது போன்றும், நோயாளியின் படுக்கையில் நாய்கள் படுத்து கிடப்பது போன்றும் வீடியோ வெளியாகி உள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை நாய்கள் கடிக்க பாய்வதால் அச்சமடைந்துள்ள நோயாளிகள், இதனை தற்போது வரை மருத்துவமனை நிர்வாகம் கொண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். முதல்வரின் சொந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையிலேயே இதுபோன்ற அவலங்கள் நீடிப்பது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.