எழுத்தின் அளவு: அ+ அ- அ
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஆம்ஸ்டிராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்டிராங் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவருடைய மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், மாநில தலைவராக ஆனந்தனும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்திருந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்ஜீ கவுதம் மற்றும் முன்னாள் எம்பி ராஜாராம் ஆகியோரிடம், மாநில தலைவர் ஆனந்தன் மூத்த நிர்வாகிகளை வெளியேற்றி வருவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் ஆனந்தனுக்குப் பதிலாக மாநில தலைவராக ஆம்ஸ்ட்ராங் மனைவி நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் பொற்கொடியை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் அறிவித்துள்ளார். பொற்கொடி இனி கட்சி பணிகளை கவனிக்க மாட்டார் என்றும் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை மற்றும் தனது குடும்பத்தையும் மட்டுமே கவனித்துக் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.