பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அக்கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் மாநில கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே செயலிழந்து விட்டதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு விளம்பர திமுக அரசே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாநிலத்தின் தலித் மக்களின் குரலாக அறியப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது எனவும், குற்றவாளிகளை மாநில அரசு தண்டிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் படுகாலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், வன்முறையும், மிருகத்தனமும் தமிழகத்தில் வழக்கமாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பகையானாலும், அரசியல் காழ்ப்புணர்வானாலும், இதுபோன்ற வன்முறைகள் தீர்வு ஆகாது எனவும், உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனவும் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார். 

சமூக விரோத கும்பலால் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதையே இந்த படுகொலை நிரூபித்துள்ளதாகவும் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து இருப்பதற்கு, காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திமுக ஆட்சியில்  சட்டம், ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறை கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்எபி கார்த்தி சிதம்பரம், தமிழகத்தில் இத்தகைய பயங்கரவாத சம்பவங்கள் நடப்பது மிகுந்த வேதனைக்குரியது என்றும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கதக்கது என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Night
Day