பட்ஜெட் எதிரொலி - தங்கம், வெள்ளி விலை சரிவு

எழுத்தின் அளவு: அ+ அ-


மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதன் எதிரொலியாக தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படுவதை தடுக்கவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தங்கம் மற்றும் வைர வியபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ள நிலையில் சுங்கவரி குறைப்பின் தாக்கம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில் 2024-2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி மீதான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். அதேபோல் பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 

ஆபரணத் தங்கம் கிராமுக்கு 260 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6 ஆயிரத்து 550 ரூபாயாகவும், சவரனுக்கு 2 ஆயிரத்து 80 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளியும் கிராமிற்கு 3 ரூபாய் 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் 92 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதனிடையே, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகுறைவு, நடுத்தர மக்களுக்கு சாதகமாக இருக்கும் என தங்கம் மற்றும் வைர வியபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி சுங்கவரி வரி குறைப்பு காரணத்தால் தங்கத்தின் விற்பனை விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாயும், வெள்ளி கிலோவிற்கு 3 ஆயிரத்து 100 ரூபாயும் குறைந்துள்ளதாகவும் இது நடுத்தர மக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதோடு, சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி வந்தவர்களுக்கு நல்ல லாபம் என்றும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், கடத்தல் தங்கத்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கும் நிலையை தடுக்கவே தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்து இருப்பதாகவும் கூறினார். மேலும், சுங்க வரியை குறைத்திருப்பதால் தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படுவது குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பட்ஜெட்டை வரவேற்பதாக தெரிவித்த அவர், அடுத்த இரண்டு மாத்தத்திற்கு தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் இதே விலை தொடரும் என்றும் கூறினார்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதிரடியாக விலை குறைத்துள்ளது. நடுத்தர வர்கத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ள இந்த விலைகுறைப்பு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே சமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day