பட்டாசாய் வெடித்த பெண்.. பதறிய டி.ஆர்.பாலு.. அப்படியே அப்பீட்டு!

எழுத்தின் அளவு: அ+ அ-

பல்லாவரம் அருகே உள்ள அஸ்தினாபுரத்தில் டி.ஆர்.பாலுவின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் பெண் ஒருவர் பொங்கி எழுந்தது குறித்து விரிவாக காணலாம்...

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளர் டி.ஆர் பாலு வாக்கு சேகரித்தார். அப்போது, திமுகவினர் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பியவாறு வந்ததால் பேருந்திற்காக காத்திருந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் ஏராளமான வாகனங்கள் பின்தொடர்ந்து வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது, பேருந்திற்காக காத்திருந்த பெண் ஒருவர், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டி.ஆர்.பாலுவின் வாகனத்தை நோக்கி சென்று திமுகவினரின் அராஜக செயலை தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திமுகவினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்த முற்பட்டும், அந்த பெண் அவர்களை வார்த்தைகளால் வெளுத்து வாங்கியதோடு, டி.ஆர்.பாலு வந்த பிரச்சார வாகனத்தை நோக்கி முன்னேறி ஆவேசத்துடன் கேள்வி கேட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை பார்த்தும் பார்க்காதது போல் பாவனை செய்த டி.ஆர்.பாலுவோ, எதுவுமே நடக்காதது போல், உடன்பிறப்புகள் அளித்த மாலையை வாங்கி அவராகவே தனது கழுத்தில் போட்டுக்கொண்டு நமட்டு சிரிப்பு சிரித்தார்.

வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்களை பொதுமக்கள் கேள்வி கணைகளால் துளைத்து எடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை சைதாப்பேட்டையில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை பொதுமக்கள் தங்கள் பகுதிக்குள் வர எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர்.

அதே போல் சிவகங்கையில் தனது மகனுக்கு வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கிராம பெண்கள் தடுத்து நிறுத்தியதோடு, உள்ளே வந்தால் கல்லால் அடித்து விரட்டுவோம் என ஆவேசமடைந்தனர். அதனால் ப.சிதம்பரம் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பிச்சென்றார்.

இதேபோல், ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெண் ஒருவர், அவர்களை ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கினார். மதுவை ஒழிப்போம் எனக் கூறிய திமுக அரசு ஏன் டாஸ்மாக் கடைகளை இதுவரை மூடவில்லை என கேட்டு அங்கிருந்த கட்சியினரை ஆடிபோக செய்தார்.

வாக்கு சேகரிக்க வரும் திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரை தமிழகம் முழுவதும் பொது மக்கள் அதிலும், குறிப்பாக பெண்கள் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்பது திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day