எழுத்தின் அளவு: அ+ அ- அ
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரத்தில் சாய்நாத் என்ற பட்டாசு தயாரிப்பு ஆலை உள்ளது. ஆலையில் இன்று பட்டாசு தயாரிக்கும் பணி வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த 3 அறைகளில் பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 2 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.
இந்த பட்டாசு ஆலை விபத்தில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், விபத்து நடந்த பட்டாசு ஆலையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஜே சி பி இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6 பேர் பலியான இந்த கோர விபத்தை அடுத்து பட்டாசு ஆலை உரிமயாளர் பாலாஜி, குத்தகைதாரர் சசிபாலன் இருவரும் தலைமறைவாகினர். பட்டாசு ஆலையில் உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படாததும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததுமே உயிர் பலி ஏற்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆலையில் வேதிப் பொருட்கள் கலவையின் போது விபத்து நடந்ததாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.