பத்து அம்ச கோரிக்‍கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வருவாய்த்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பத்து அம்ச கோரிக்‍கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் வருவாய்த்துறையினர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வருவாய் மற்றும் பேரிடர் துறை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்‍கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறையினர் ஏற்கெனவே போராட்டம் நடத்திய நிலையில், தற்போது மீண்டும் தமிழகம் முழுவதும், ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்த வகையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி உள்ளிட்ட 8 தாலுகா அலுவலகங்கள் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சான்றிதழ் வழங்குதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்‍குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக்‍ கண்டித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அரசு அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தங்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்‍கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வருவாய்த்துறை ஊழியர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 22ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்திலும், 27ஆம் தேதி முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். அரசு ஊழியர்களின் போராட்டத்தால் அரசு அலுவலகங்களுக்‍கு சான்றிதழ் பெற வந்த பொதுமக்‍கள் பாதிக்‍கப்பட்டனர். 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்‍கோரியும் தேர்தல் வாக்‍குறுதியை நிறைவேற்றக்‍கோரியும் நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறையினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது திமுக அரசுக்‍கு எதிராக கண்டன முழக்‍கங்களை எழுப்பினர்.

நாகையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்க்‍க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த டிஎஸ்பி ரமேஷ் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பியதால், வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் சலசலப்பு நிலவியது. 

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை கண்டித்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டு பன்றிகள் பயிர்களை அதிகமாக சேதப்படுத்தி வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டால், விரைவில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரித்தனர். 

Night
Day