எழுத்தின் அளவு: அ+ அ- அ
பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என மதிமுக சார்பில் வாதிடப்பட்டது. சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம் வழங்கப்படும் என தெரிவித்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்ககோரிய மதிமுகவின் கோரிக்கை இன்றே பரிசீலக்கப்படும் என தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் பம்பரம் சின்னம் பொதுச்சின்ன பட்டியலில் உள்ளதா என விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.