எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG மாணவி உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
விக்கிரவாண்டியில் செயிண்ட் மெரிஸ் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் UKG படித்த 5 வயது மாணவி லியா லட்சுமி, மதியம்
பள்ளி இடைவேளையின் போது வெளியே சென்று விட்டு மீண்டும் வகுப்பறைக்கு வராததால் பல்வேறு இடங்களிலும் ஆசிரியர்கள் தேடி வந்தனர்.
அப்போது பள்ளி கழிவுநீர் தொட்டியில் மாணவி விழுந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி லியா லட்சுமியின் உடலை, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியின் பின்புறத்தில் மைதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால்
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 5 வயது ukg மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.