நீலகிரி அருகே வனப்பகுதிக்குள் வளர்ப்பு எருமையை தேடி சென்ற பழங்குடியின இளைஞரை கொடூரமாக தாக்கி புலி கொன்று தின்ற சம்பவம் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே வனப்பகுதியில் இளைஞரை வேட்டையாடி பாதி உடலை சாப்பிட்டுவிட்டு மீதி உடலை புலி போட்டுச் சென்ற இடம்தான் இது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கவர்னர் சோலை பகுதியில் உள்ள அமைந்துள்ளது கொள்ளக்கோடு மந்தை வனப்பகுதி. இந்த பகுதிகளில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த 38 வயதான கேந்தர் குட்டன் என்பவர் எருமைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.
புதன்கிழமை மாலை தனது எருமையை தேடி கேந்தர் குட்டன் வன பகுதிக்குள் சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராத நிலையில், இரவாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவருடைய குடும்பத்தினரும் உறவினர்களும் இரவு முழுவதும் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து வியாழக்கிழமை காலை அவர்கள் மீண்டும் தேடியபோது, கேந்தர் குட்டனின் உடல் கவர்னர் சோலை பகுதியில் கண்டுபிடிக்கபட்டது.
கேந்தர் குட்டனை அடித்துக் கொன்ற புலி, பாதி உடலை சாப்பிட்டு விட்டு மீதி உடலை அங்கு போட்டுவிட்டுச் சென்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து உடனடியாக பார்சன்ஸ் வேலி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நீலகிரி வடக்கு வன கோட்ட வனத்துறையினர் மற்றும் பைக்காரா காவல்துறையினர், கேந்தர் குட்டனின் பாதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஓராண்டுக்கு முன்பு இதே போன்று ஒருவர் மாயமானதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு செய்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கேந்தர் குட்டனை தாக்கி கொன்ற புலியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கேந்தர் குட்டன் உடல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது. புலி தாக்கி உயிர் இழந்த கேந்தர் குட்டனின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பாக 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை, நீலகிரி வனக்கோட்ட வனத்துறை அதிகாரிகள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புலி தாக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.