பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. - கன்னியாகுமரி தொகுதியில் போட்டியா!

எழுத்தின் அளவு: அ+ அ-

 விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.... காங்கிரசில் இருந்து விஜயதரணி விலகியது ஏன்... நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியா?  என்பது பற்றி சற்று விரிவாக காணலாம்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவான விஜயதரணி 2021 சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2021 சட்டமன்ற தேர்தலின் போது, பெரும் போராட்டத்துக்கு பின்பே விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட விஜயதரணிக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்தது.

அச்சமயத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்த விஜயதரணிக்கு, பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கும் இடையே சட்டப்பேரவையில் நல்ல நட்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து வானதி சீனிவாசன், பா.ஜ.க.வில் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் உண்டு என விஜயதரணிக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது... கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விஜயதரணி விரும்பிய நிலையில், நடிகரும் எம்பியுமான விஜய் வசந்த் நங்கூரமிட்டு நின்றுவிட்டதால் தமக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை என நினைக்க ஆரம்பித்தார் விஜயதரணி.

அதனால் வானதி சீனிவாசன் கூறிய அறிவுரை பற்றி அவர் சிந்தித்து கொண்டிருந்த வேளையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தொடர்ந்து விஜயதரணியிடம் பா.ஜ.க.வில் சேருவது பற்றி பேசி வந்ததாகத் தெரிகிறது.

மாநில காங்கிரஸ் கட்சியும் கோமா நிலைக்கு சென்றதால், பா.ஜ.க.வில் சேர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அமைச்சராகி விடலாம் என கணக்கு போட்ட எம்.எல்.ஏ. விஜயதரணி, காங்கிரசுக்கு குட் பை சொல்ல முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியில் பட்ஜெட் தொடர் முழுவதையும் புறக்கணித்த விஜயதரணி, தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்டு இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேரப்போகிறார் என்ற தகவலும் பரவ தொடங்கியது.

ஆனால் வழக்கு ஒன்றுக்காக உச்சநீதிமன்றத்துக்கு வந்ததாக பேசி சமாளித்த விஜயதரணி, கன்னியாகுமரி தொகுதியில் சீட் ஒதுக்கக்கோரி தொடர்ந்து பா.ஜ.க.வுடன் பேச்சு நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று சுமூக முடிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்துக்கு நேரில் சென்ற விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தலைமையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

பா.ஜ.க.வில் இணைந்த பின் பேசிய விஜயதரணி, காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

மிகப்பெரிய தலைவரான பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்த விஜயதரணி, பா.ஜ.க.வை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியில் சேர்ந்ததாக தெரிவித்தார்.

பா.ஜ.க.வில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவித்த விஜயதரணி, பிரதமர் மோடியின் நாட்டின் சேவைக்கு அவசியமானது என்றார்.

பா.ஜ.க.வில் விஜயதரணி இணைந்ததை வரவேற்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

varient
Night
Day