எழுத்தின் அளவு: அ+ அ- அ
மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன், கஷ்டமான முடிவை இஷ்டபட்டு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, பின்னர், தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றார். பின்னர், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பையும் ராஜினாமா செய்த அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே எண்ணில், உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு வேறு அலுவலகத்தில் கேட்க வேண்டிய கேள்வி என்றும், அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்தவர்கள் எனவும் கூறினார்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற தமிழிசை, பாஜக பெரியளவில் வளர்ந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.