பாதுகாவலரை அடிக்க பாய்ந்த அமைச்சர் - ஆய்வுக்கு வந்த இடத்தில் அலப்பறை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்ரீவைகுண்டம் அருகே கால்நடை மருந்தகத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பாதுகாவலரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரப்பட்ட அமைச்சர் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். 
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், செல்லும் வழியில் உள்ள கால்நடை மருந்தகத்திற்குள் திடீரென்று நுழைந்தார். அப்போது பணியில் இருந்த கால்நடை மருத்துவரிடம், மருந்தகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை வாங்கி பார்வையிட்டார். அப்போது, "இந்த பகுதிக்கு வருகை தர உள்ளேன் என்பது தெரிந்தும், வளாகத்தில் குப்பையாகவும், மணல் குவிந்தும் கிடக்கிறதே" என மருத்துவரை பார்த்து கடிந்து கொண்டார். மேலும், அடுத்த முறை தான் இந்த பகுதிக்கு வரும் போது அனைத்தும் சீர் செய்து வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவமனையில் தினமும் எத்தனை கால்நடைகள் சிகிச்சைக்கு கொண்டுவரப்படும் என மருத்துவரை பார்த்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டபோது,  அமைச்சரின் பாதுகாவலர் ஒருவர் "எவ்வளவு ஆடு மாடு வந்துருக்குன்னு லிஸ்டை எடுத்து காட்டுங்க" என்று மருத்துவரை பார்த்து கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நான் பேசிக்கொண்டிருக்கும்போது, நீ எப்படி மருத்துவருக்கு ஆலோசனை வழங்கலாம் என கோபப்பட்டு, நாக்கை துருத்திக்கொண்டு, பாதுகாவலரை அடிக்க கையை ஓங்கினார்.

பெயருக்கு மேற்கொண்ட ஆய்வை முடித்துக்கொண்டு வெளியே வந்த அமைச்சர், மருத்துவரை பார்த்து உங்களுக்கு எந்த ஊர் என அமைச்சர் கேட்க, விழுப்புரம் என மருத்துவர் கூறினார். அப்போது, டிரான்ஸ்பருக்கு முயற்சி செய்கிறீர்களா என அமைச்சர் கேட்க, மருத்துவரும் ஆமாம் என தெரிவித்தார்.

அதற்கு அமைச்சரோ, "இப்போ போடப்போறோம் அல்லவா, அதில் பார்த்துக்கொள்ளலாம்" என அசால்டாக கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

டிரான்ஸ்பர் பெற பல நெறிமுறைகள் உள்ள நிலையில், அமைச்சரோ, சர்வ சாதாரணமாக டிரான்ஸ்பர்தானே பார்த்துக்கொள்ளலாம் என கூறியதும், ஆய்வுக்கு சென்ற இடத்தில் பொது இடம் என்று கூட பாராமல் பாதுகாவலரை அடிக்க பாய்ந்ததும், திமுக ஆட்சியில் ஆளும்கட்சியினர் நினைத்தால் எதுவும் செய்யலாம் என்பதற்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

Night
Day