எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற கல்லூரி மாணவர்களை போலீசார் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தவிக்கவிட்டு சென்றுள்ளனர். முடிவுக்கு வராத போராட்டத்தை முடிந்துவிட்டதாக போலீசாரே அறிவித்துவிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்திய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற கல்லூரி மாணவர்களை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் போலீசார் தவிக்கவிட்டு சென்ற காட்சிகள் தான் இவை..
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தங்களுக்கு சிறப்பு டி.என்.பி.எஸ்.சி., டெட் போன்ற தேர்வுகளை நடத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாற்றுத்திறனாளி ஆணையரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசாரே போராட்டம் முடிந்துவிட்டதாக கூறி, மாற்றுத்திறனாளிகளை குண்டு கட்டாக அப்புறப்படுத்தி உள்ளனர். மேலும், சொந்த ஊர்களில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்ற நிலையில் சிலரை காட்டுப்பகுதியிலேயே இறக்கிவிட்டு மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை பூந்தமல்லி, மாதவரம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இறக்கிவிட்டும் சென்றுள்ளனர். இதேபோன்று 30-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து எப்படி செல்வது என அறியாத மாற்றுத்திறனாளிகள், செய்வதறியாது அப்படியே முடங்கி நின்றன். குடிநீருக்கும், உணவுக்கும் கூட அள்ளல்படும் நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.
தங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் இத்தனை அலட்சியமாக கையாண்டது சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களை வேதனை அடைய செய்துள்ளது.