எழுத்தின் அளவு: அ+ அ- அ
பொங்கல் பண்டிகையை ஒட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, மாடு பிடி வீரர்கள் உற்சாகமாக அடக்குவதில் ஆர்வம் காட்டினர். இந்த போட்டியில், மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் மொத்தம் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு 7 லட்சம் மதிப்பிலான கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இதன் மூலம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பிரபாகரன் 3-வது முறையாக பரிசு வென்று அசத்தியுள்ளார். மேலும், மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்தார். 2 ஆவது இடம் பிடித்த மதுரை சின்னப்பட்டி தமிழரசனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்தார்.
இதேபோல, ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக களமாடிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன் கருப்பன் காளையை கௌரவிக்கும் விதமாக, அதன் உரிமையாளர் மருதுபாண்டி என்பவருக்கு கார் ஒன்று முதல் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவரின் காளைக்கு, பசு மாடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. மொத்தம் 840 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு 10 சுற்றுகளாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்கள், காவல்துறையினர் என மொத்தம் 43 பேர் காயமடைந்தனர். ஏறத்தாழ 9 மணி நேரமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4:45 மணி அளவில் நிறைவடைந்தது.