எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளியில் பாலியல் புகாரில் சிக்குவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தனியார் பள்ளி இயக்குனரக அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பாலியல் புகார்கள் வந்தால் உடனடியாக நேரடி ஆய்வு செய்து உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வகுப்பில் ஆசிரியர்கள் அளவுக்கு மீறி கடிந்து கொண்டால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்றும் அவர்கள் வேறு எங்கும் பணியாற்ற முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.