மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 89வது பிறந்தநாளில் அவர் தம் நினைவைப் போற்றுவோம் என அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மகனும், தினத்தந்தி, மாலைமலர் நாளிதழ்களின் உரிமையாளருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 89வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தமிழ் பத்திரிக்கை உலகில் பெரிய திருப்பத்தை உருவாக்கியவர் - தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும் பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் - மேலும் கல்வி, விளையாட்டு, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் வியத்தகு சாதனைகள் படைத்தவர் - விளையாட்டு துறையில் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் என புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியதையும் இந்நாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன். அன்னாரது பிறந்தநாளில் தமிழ் உலகுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளையும், சமூக சேவைகளையும் அவர்தம் நினைவில் போற்றிடுவோம் என அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.